AirAsia Newsroom

View Original

​MAHB-யின் கட்டாய கோரிக்கைக்கு இணங்க ஏர்ஏசியா எதிர்ப்பில் இருக்கும் பயணிகள் சேவைக் கட்டணத்தை வசூலிக்கும்

சிப்பாங், 8 ஆகஸ்ட் 2019 - அண்மைய நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) விதித்த கூடுதல் பயணிகள் சேவைக் கட்டணத்தை (PSC) இன்று இரவு நள்ளிரவு முதல் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு ஏர்ஏசியா வசூலிக்கும்.

MAHB-யின் கிளை நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் (சிப்பாங்) செண்டிரியான் பெர்ஹாட்டிற்கு (MASSB) செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணம் தொடர்பில் ஏர்ஏசியா பெர்ஹாட் மற்றும் ஏர்ஏசியா X செய்த மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விமான நிலைய வசதிகளைப் பயன்படுத்துவதற்காக அம்முனையத்திலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளுக்கும் MAHB, PSC அல்லது விமான நிலைய வரியை விதிக்கிறது. அவ்வரியை, அவ்விமான நிலைய செயல்பாட்டாளர் சார்பில் பயணிகளிடமிருந்து ஏர்ஏசியா வசூலிக்கிறது.

கடந்த ஜூலை 2018 முதல், MAHB klia2 விமான முனையத்தைப் பயன்படுத்தும் அனைத்து ஆசியானுக்கு அப்பால் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய PSC கட்டணமாக RM73-ஐ அமலுக்கு கொண்டு வந்தது. இது, முழு சேவை முனையமான KLIA-வில் விதிக்கப்படும் PSC கட்டணத்திற்கு ஈடாகும். முந்தைய PSC கட்டணமான RM50-ஐக் காட்டிலும் இது அதிகமாகும். விமானப் பயணம் அனைவருக்கும் மலிவான விலையில் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இவ்வரிக் கட்டணத்தை வசூலிக்க ஏர்ஏசியா மறுத்துவிட்டது.

தற்போது, ஏர்ஏசியா இந்த கூடுதல் PSC வரிக் கட்டணமான RM23-ஐ வசூலிக்கும். அந்த கூடுதல் தொகையை, எதிர்ப்பின் கீழ் இருக்கும் பயணிகள் சேவைக் கட்டணம் எனத் தெளிவாகக் கட்டண அறிக்கையில் வகைப்படுத்திக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏர்ஏசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மட் கூறுகையில், "நாங்கள் முழு RM73 PSC-ஐ வசூலிப்போம், ஆனால் நாங்கள் கடும் எதிர்ப்பின் கீழ் அவ்வாறு செய்கிறோம். கூடுதல் PSC-யை வகைப்படுத்துவதன் வழி, ஆண்டுதோறும் ஆசியான் அல்லாத இடங்களுக்குப் பயணிக்கும் எங்கள் 5.5 மில்லியன் பயணிகள் எவ்வளவு பணம் செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். KLIA-இல் உள்ள மிக உயர்ந்த வசதிகளுடன் ஒப்பிடும்போது, இந்த முனையத்திலிருந்து பயணிப்பதற்காக பயணிகள் செலுத்தும் தொகைக்கு இணையான மதிப்பை அவர்கள் பெறவில்லை என்பதில் பலர் எங்களுடன் உடன்படுவார்கள் என நான் நம்புகிறேன்."

ஏர் ஏசியா X மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி பென்ஞமின் இஸ்மாயில் கூறுகையில், " என்னை நம்புங்கள், நாங்கள் இதைச் செய்ய விரும்பவில்லை, மாறாக, எங்கள் பயணிகளுக்காக நாங்கள் அனுதாபப்படுகிறோம். ஆசியானுக்கு அப்பால் பயணிக்கும் பயணிகளுக்கான PSC கட்டணம் இரண்டு ஆண்டுகளில் RM32 முதன் RM73 வரை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது ஒரு தன்னிச்சையான உயர்வு. எனவே, சட்டரீதியில் எங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். ஆயினும், எங்கள் முறையீடு தள்ளுபடி செய்யப்படும் பட்சத்தில் எங்களால் தொடர்ந்து பயணிகளுக்கு மானியம் வழங்க இயலாத காரணத்தால் இந்த கூடுதல் RM23-ஐ வசூலிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். எங்கள் பயணிகள் இதனைப் புரிந்துக்கொள்வார்கள் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்."