தேச மேன்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரம் பெற்றார், டோனி பெர்னாண்டஸ்
கோலாலம்பூர், 28 நவம்பர் 2019 - கோலாலம்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேச மேன்மை மற்றும் உலக அமைப்பாளர் விருதுகள் 2019-இல் (Nation-Building and World Setter Awards 2019) ஏர்ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அவர்களுக்கு தேச மேன்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் (தனியார் துறை) விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக தேச மேன்மை நிறுவனத்தின் (Nation-Building Institute International) தலைவர் பேராசிரியர் டாக்டர் கிரியென்சாக் சாரியோன்வோங்சாக் டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸுக்கு இவ்விருதை வழங்கி சிறப்பித்தார்.
இந்த விருதுகளை வெல்லும் வெற்றியாளர்கள் 14 முக்கிய நபர்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான மதிப்பீடு அளவுகோல்கள் முறையே கொள்கை சீரமைப்பு, தாக்கம், பங்களிப்பு, புதுமை, பக்தி மற்றும் நிலைத்தன்மை போன்ற காரணிகளை உள்ளடக்கியது.
இது குறித்து டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கருத்து தெரிவிக்கையில், "இவ்விருதைப் பெறுவதில் நான் மிகுந்த மரியாதையும் தாழ்மையும் கொள்கிறேன். ஏர்ஏசியாவை பொருத்தமட்டில், நாங்கள் எங்கு இயங்கினாலும் தேச மேன்மை அம்சம் எங்கள் வணிகத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். மலேசியாவில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகிரப்பட்ட செழுமை என்பது இப்போது நாம் ஏற்றுக்கொண்ட கொள்கை அல்ல, மாறாக கடந்த 18 ஆண்டுகளாக ஆரம்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். அனைவரும் வான்வழி பயணம் மேற்கொள்வதை இயேதுவாக்கியதன் மூலம் நாட்டை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளோம், அதாவது மூன்றில் இரண்டு பங்கு மலேசியர்கள் தற்பொழுது சுற்றுலா, வர்த்தகம், கல்வி, மனிதாபிமான செயல்கள் மற்றும் பல காரணங்களுக்காக, உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் வான்வழி பயணம் மேற்கொள்கின்றனர். ஏர்ஏசியா-க்கு முன்பு, மலேசியாவில் ஒரு சிறுபான்மையினரே வான்வழி பயணம் மேற்கொள்ள முடிந்தது. பலருக்கு விமான பயணம் என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தது.
" ஒரு முதலாளியாக, மலேசியாவில் உள்ள எங்கள் 12,000 ஆல்ஸ்டார்ஸ்களில் ஏறத்தாழ 78% B40 பின்னணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிறந்து விளங்குவதற்கும், புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித்தந்து, இப்பிராந்தியத்தில் அதிக பெண் விமானிகள் மற்றும் பொறியியலாளர்களின் எண்ணற்ற சேவைகள் உட்பட பல வெற்றிக் கதைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவை, உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டின் சான்றாகும். இதன் தாக்கம், வணிகம், ஊழியர்கள் மற்றும் தத்தம் குடும்பங்களையும் கடந்து நாங்கள் செயல்படும் பிராந்தியங்களில் உள்ள சுற்றுலாத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் மிகுந்த பயனளிக்கிறது.
இந்த தேச மேன்மை மற்றும் உலக அமைப்பாளர் விருதுகள், 'உயர் வருமானம் கொண்ட தேசத்தின் வளர்ச்சியை நோக்கி அரசாங்கம், வணிகல் மற்றும் சிவில் சமூகத்தை இணைத்தல்' என்ற கருப்பொருளைக் கொண்ட, தலைநகரில் இரண்டு நாள் நடைபெற்ற தேச மேன்மை 2019 மாநாட்டின் ஒரு பகுதியாகும்.
மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (MIER), மற்றும் ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப மையம் (CREATE) ஆகியவற்றுடன் இணைந்து NBII இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.