தீபாவளியையொட்டி OURFARM மற்றும் IKHLAS ஏற்பாட்டில் 220 பி40 குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள் அன்பளிப்பு
‘#Food4B40 தீபாவளி’ எனும் இத்திட்டம் OURFARM, IKHLAS மற்றும் இதர சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. மசாலா வீல்ஸ் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கு கஸானா நேஷனல் அறநிறுவனமான யாயாசான் ஹாசானா ஆதரவு வழங்கியது.
இத்திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் அடையாளம் காணப்பட்ட 220 பி 40 குடும்பங்களுக்கு 500 கிலோ கிராமிற்குக் கூடுதலான காய்கறிகள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பிபிஆர் லக்சமானா, பிபிஆர் பத்து மூடா, பிபிஆர் கெப்போங், பிபிஆர் ஜிஞ்சாங் உள்ளிட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மெலாத்தி புக்கிட் சுபாங் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்த உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.
லலிதா சிவநேசர், OURFARM தலைமை செயல்முறை அதிகாரி: “இந்தக் குடும்பங்களுக்கு உதவுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கோவிட் தொற்றால் இந்தச் சமூகத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவ்வாண்டு இவர்கள் தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் மற்றும் விவசாய பொருள் தயாரிப்பாளர்கள் தங்களின் வர்த்தகத்தைத் தொடர்வதற்கு உதவும் வகையில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட தொடக்க காலம் முதலே OURFARM இவர்களுக்கு உதவி வருகிறது. இந்தத் தொற்று நோய் ஒட்டு மொத்தத்தில் பொருளாதாரத்தை மட்டுமே பாதிக்கவில்லை. தனி நபர்கள் மற்றும் சமூகத்தையும் பாதித்துள்ளது. இத்தகைய உதவி மூலம் பண்டிகை காலத்தில் இவர்களின் முகத்தில் புன்னகையைக் காணலாம் என்று நாங்கள் நம்புகிறோம். சரியான தருணத்தில் இந்த உணவு பொருள்களை இவர்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்குத் தோள் கொடுத்த IKHLAS, மசாலா வீல்ஸ் மற்றும் டிரோப் அண்ட் வாஷ் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான உதவி மட்டுமே கிடையாது. விவசாயிகளையும் இது உள்ளடக்கும். அதே வேளையில், இதுபோன்ற சவால்மிக்க காலங்களில் மேலும் அதிகமானோருக்கு உதவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம்”.
இக்லாஸ் கமாருடின், தலைவர் IKHLAS: “IKHLAS கொள்கைக்கேற்ப நன்கொடை என்பது பணம் வழங்குவதற்கு அப்பால் உள்ளது. நேரம் மற்றும் முயற்சிகள் முக்கியம். மக்களின் சமூக பின்னணி மற்றும் சமய நம்பிக்கைக்கு அப்பால் நமது சின்னத்தின் வழி தேவைப்படுவோருக்குத் தக்க உதவிகள் புரிய வேண்டும் என்பதே எங்களின் தலையாய இலக்கு. இது ஒவ்வொரு மனிதரின் முக்கிய அம்சம் ஆகும். இந்த வாய்ப்புக்காக நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம். அதே சமயம், இந்த முயற்சிக்குத் தோள் கொடுத்தது குறித்தும் நாங்கள் பெருமை அடைகிறோம். நமது ஒற்றுமையை நாட்டின் ஒற்றுமையாகக் கருதுவோம்”
‘ESG’ க்கான (சமூக சுற்றுச் சூழல் மற்றும் தொழில் நிர்வாக நடைமுறை) OURFARM நிறுவனத்தின் ஆதரவுக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கடந்த இரு மாதங்களாக மசாலா வீல்ஸுடன் இணைந்து காய்கறிகளை விநியோகம் செய்து வருகிறோம். சமூகத்திற்கு உணவு அளிப்பது மட்டுமல்லாது அவர்களை மேம்படுத்துவதும் எங்களின் நோக்கமாகும்.
இது போன்றே 2020 ஏப்ரல் தொடங்கி நாடு முழுவதும் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 15,000 திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு IKHLAS உதவியுள்ளது. ’கிவ் வித் இக்லாஸ்’ எனும் தனது முதலாவது டிஜிட்டல் நன்கொடை திட்டத்தின் வழி இந்த உதவியை வழங்கியது. அதோடு, அண்மையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சபா மக்களுக்கு உதவ ‘இக்லாஸ் ஃபோர் சபா’ எனும் டிஜிட்டல் நன்கொடை திட்டத்தை இது தொடங்கியது.