மலேசிய வான்போக்குவரத்து பயணிகளை மாவ்கோம் தோல்வியுறச் செய்துள்ளது என ஏர்ஏசியா கூறுகிறது

​சிப்பாங், 22 அக்டோபர் 2019 -- klia2-ல் உள்ள குடிநுழைவுச் சாவடிகளில் மோசமடைந்தது வரும் நெரிசல் குறித்து தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி கோறிய மலேசிய வான்போக்குவரத்து ஆணையத்திற்கு (மாவ்கோம்) பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என ஏர்ஏசியா கருதுகிறது. ஏனெனில், மக்கள் நிதியால் இயங்கும் மாவ்கோமிடம், களமிறங்கி இவ்விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பு உள்ளதாக அது கூறுகிறது.

ஏர்ஏசியா பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் கூறுகையில்," செய்தி மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பகிரங்கமாக முன்னிலைப்படுத்தப்பட்ட போதும் நாங்கள் ஏன் ஆதாரங்களை வழங்க வேண்டும்? இது வான்போக்குவரத்து பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாவ்கோமின் செயலற்ற தன்மையையும், பொறுப்பின்மையையும் மற்றும் நியாயமற்ற புறக்கணிப்பையுமே நிரூபிக்கிறது.

"மாவ்கோம் அதிகாரிகள், தங்களது கே. எல். சென்ட்ரல் அலுவலகத்திலிருந்து klia2-குச் சென்று முக்கிய நேரங்களில் குடிநுழைவுச் சாவடிகளில் நிலவும் நெரிசலைக் கண்கூடாகக் கண்காணிக்க சில மணி நேரங்களே தேவைப்படும். அவர்கள் எந்த நாட்களிலும் வரலாம், ஏனெனில் இது தினசரி நிலவும் பிரச்சனை மாறாக தனித்த சம்பவமல்ல.

"அண்ணிய கட்டுப்பாட்டாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ஏர்ஏசியாவின் குறைந்த கட்டண மாதிரியை அறிந்துகொள்ள நாடிவரும் வேளையில், இவ்விவகாரத்தில், மாவ்கோமில் இருந்து அதன் நிர்வாகத் தலைவர் உட்பட யாரும் klia2-இன் பக்கத்தில் இருக்கும் ஏர்ஏசியாவின் தலைமை அலுவலகமான ரெட்கியூவிற்கு வருகைபுரியவில்லை. நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் இங்கே ஏர்ஏசியாவைப் பற்றி பேசுகிறோம். மலேசியாவின் முதன்மை, குறைந்த கட்டண விமான நிறுவனம், இன்று உலகின் 13-வது மிகப்பெரிய விமானக் குழுவாகும். மலேசியாவிற்கும் மாவ்கோமிற்கும் நாங்கள் முக்கியமில்லையா?

மே 2018 முதல், மாவ்கோம் மலேசிய விமான நிலையங்களிலுருந்து பயணிக்கும் பயணிகளிடமிருந்து தலா RM1-ஐ வசூலித்தது. ஏறத்தாழ RM30 மில்லியனை ஒழுங்குமுறைச் சேவைக் கட்டண வசூலிப்பிலிருந்து மாவ்கோம் சேகரித்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றுவரை, மாவ்கோம் 2018-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.

முன்னால் போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ அசிஸ் கப்ராவி, 2017-இல் மாவ்கோம் சார்பாக விமான நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சேவைக் கட்டணமாக RM1-ஐ வசூல் செய்யும் என அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்த ஒழுங்குமுறைச் சேவைக் கட்டணம் பயணிகளுக்கு விதிக்கப்படுவது மிக நியாயமானது, ஏனெனில் அவர்களுக்கு மாவ்கோம் வழங்கிய சேவைகள் குறிப்பாக பயணிகளின் புகார்களை நிர்வகித்தல், பயணிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவை அவ்வப்போது நடத்த இக்கட்டணம் பயன்படும்."

ஏர்ஏசியா X பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் கூறுகையில்,"தவறாமல் கட்டணம் செலுத்தி மாவ்கோம் ஆணையர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சம்பளம் வழங்கும் அனைத்து மலேசியர்களும் வான்போக்குவரத்து பயணிகளின் உரிமைகளை நிலை நிறுத்துவதிலிருந்து தவறியதற்காக அவர்களைக் கண்டனத்துக்கு உள்ளாக்க வேண்டும். இதற்கிடையில், klia2-இல் குடிநுழைவுச் சாவடியில் நாளுக்கு நாள் மோசமடைந்தது வரும் நெரிசல் எங்கள் பயணிகளை வெகுவாக பாதிக்கிறது. விரக்தியினால், நாங்கள் மாவ்கோமிற்கு கடிதம் எழுதி இவ்விவகாரத்தில் தலையிட்டு ஒரு நல்ல தீர்வை வழங்கக் கோறினோம்."

"புகார்கள் மற்றும் சிக்கல்களைக் களைய மாவ்கோம் தயங்குவது முதல் முறையல்ல, இது கடைசியாகவும் இருக்காது என நான் கருதுகிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு klia2-இல் செயல்பாட்டு இழப்புகளுக்காக RM480 மில்லியன் நஷ்ட ஈடு கோரி ஏர்ஏசியா MAHB-க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததும் மாவ்கோம் முறையாக தலையிட்டு சமரசம் பேச மறுத்ததன் விளைவாகும். ஏர்ஏசியா மற்றும் MAHB இடையே எழுந்த பயணிகள் சேவைக் கட்டண சர்ச்சையிலும் சமரசம் பேச மாவ்கோம் மறுத்துவிட்டது. இறுதியில் அமைச்சரவை தலையிட்டு குறைந்த பயணிகள் சேவைக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டியதாயிற்று. இவை அனைத்தும், அதன் சொந்த மாவ்கோம் சட்டம் 2015-இன் பிரிவு 75-க்கு முரணானது."

"மலேசியாவின் வரலாற்றில் வலுவான சம்பளம் வாங்கும் உறுப்பினர்களைக் கொண்ட மாவ்கோம் ஒவ்வொரு முறையும் கைப்பிடித்து வழி நடத்த வேண்டிய ஓர் ஆணையம் என்ற இழுக்கைக் கொண்டிருக்கும். ஒன்றை மட்டும் மாவ்கோம் நினைவில் கொள்ள வேண்டும். மக்களால் நிதியளிக்கப்பட்டு இயங்கும் மாவ்கோம் துரதிர்ஷ்டவசமாக அவர்களைப் பெரியளவில் தோல்வியடையச் செய்துவிட்டது."