​விமான பயணம் குறைந்த விலையில் இருக்க செயலாக்கக் கட்டணத்தை அகற்றுகிறது ஏர்ஏசியா

சிப்பாங், 17 ஆகஸ்ட் 2019 - விமான பயணம் தொடர்ந்து குறைந்த விலையில் இருப்பதை உறுதிபடுத்த வருகின்ற அக்டோபர் 1 முதல் ஏர்ஏசியா, மலேசியாவுக்கான முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் செயலாக்கக் கட்டணத்தை அகற்றுகிறது.

செயலாக்கக் கட்டணம் என்பது ஏர்ஏசியாவின் இணைய அமைப்புகள் பாதுகாப்பான சூழலில் இயங்குவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தொடர் நிர்வாக பணி, பராமரிப்பு மற்றும் மேம்பாடு போன்ற செலவினங்களுக்காகச் சேகரிக்கப்படுவதாகும். இக்கட்டணத்தைத் தான் ஏர்ஏசியா விரைவில் அகற்றவிருக்கிறது.

ஏர்ஏசியா குழுமத் தலைவர் (ஏர்லைன்ஸ்) போ லிங்கம் கூறுகையில், "குறைந்த விலை விமான பயணம் என்றால் அது ஏர்ஏசியா மட்டுமே. இவ்வாறு செய்வதன் வழி, நாங்கள் வழங்கிய வாக்குறுதிக்கு உண்மையாக இருக்கிறோம் - அனைவராலும் இப்போது பறக்க இயலும். மேலும், klia2-இல் பயணிகள் சேவைக் கட்டணம் அதிகரித்திருக்கும் இவ்வேளையில் எங்களின் இந்நடவடிக்கை மிகவும் ஏற்புடையதாகும். எங்கள் பயணிகள் துன்புறுவதை தடுக்க அவர்களது பயண செலவின சுமையைக் குறைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், மற்றும் இச்சிறு உதவியை நாங்கள் பெரிதாக நம்புகிறோம்.

" 2020-இல் மலேசியாவுக்கு வருகை தாருங்கள் திட்டம் அடுத்தாண்டு வரவிருக்கும் வேளையில், இந்நடவடிக்கை அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை மலேசியாவைச் சுற்றிப்பார்க்க ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனை ஒரு வெற்றியாக்க நாங்கள் விரும்புகிறோம். இது, நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் மிகச் சிறந்ததாக இருக்கும், மற்றும் நாங்கள் நாட்டிற்காக திருப்பித்தர விரும்பும் வழிகளில் இதுவும் ஒன்றாகும்."

இவ்வாண்டு டிசம்பர் 31 முதல், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் காணப்படும் செயலாக்கக் கட்டணத்தையும் ஏர்ஏசியா அகற்றும்.


MalaysiaM ASepang